"செஞ்சி சிறுமியை நாமக்கல்லில் பார்த்தேன்" - சத்துணவு பெண் சமையலர் பரபரப்பு வாக்குமூலம்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி ஹேமாவதியை நாமக்கல்லில் பார்த்ததாகச் சத்துணவு அமைப்பாளர் ஒருவர் தெரிவித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து, சிபிசிஐடி காவல்துறையினர் அவரிடம் நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரைத் தெருவைச் சேர்ந்தவர் வடிவேலு; இவரது மனைவி பவானி. இந்தத் தம்பதியினரின் 2-வது மகள் ஹேமாவதி (7). கடந்த மாதம் 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் விமரிசையாகக் கொண்டாடிய சிறுமி, அன்று இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கச் சென்றுள்ளாள். ஆனால், மறுநாள் அதிகாலை 5 மணியளவில் பார்த்தபோது வீட்டிலிருந்த சிறுமியைக் காணவில்லை. உறவினர்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியும் சிறுமி கிடைக்காததால், சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

சிறுமியைக் கண்டுபிடிக்கச் சிபிசிஐடி போலீசார் பல குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில், மாயமான சிறுமி ஹேமாவதியை நாமக்கல்லில் பார்த்ததாகச் சத்துணவு அமைப்பாளரான பவானி என்ற பெண் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். அதில், "எனது மகளின் செல்போனில் தேடப்பட்டு வரும் சிறுமியின் புகைப்படத்தைப் பார்த்தேன். அப்போது, நாமக்கல்லில் 35 வயது மதிக்கத்தக்க இருவர் மற்றும் 55 வயது மதிக்கத்தக்க ஒருவருடன் அந்த சிறுமி இருப்பதை நேரில் கண்டேன். உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தேன்" என்றார்.

காவல்துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் நடத்திய தொடர் விசாரணைகளால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அந்தப் பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பெண் சமையலர் அளித்த இந்த முக்கியத் தகவலின் அடிப்படையில், சிபிசிஐடி அதிகாரிகள் நாமக்கல்லுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்யவும், சிறுமியுடன் இருந்ததாகக் கூறப்படும் நபர்களை அடையாளம் காணவும் காவல்துறை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
