"பார்ட்டி பண்டுனு தான் சொன்னேன்.. எடுத்தாங்க பாருங்க ஓட்டம்!" - கரூரில் முதலமைச்சர் விஜய் அதிரடி பேச்சு!
கரூர் மாவட்டத்திற்குச் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, அண்மையில் சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதங்கள் மற்றும் குதிரை பேரப் புகார்கள் குறித்து எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையான தொனியில் சாடினார்.
சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏ-விடம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குதிரை பேர விவகாரம் குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் நிலையை நகைச்சுவையுடனும் அதிரடியாகவும் விமரிசித்தார்.
"சட்டப்பேரவையில் நான் வெறும் 'பார்ட்டி பஃண்ட்' என்றுதான் சொன்னேன். அது எந்தக் கட்சிக்கான ஃபண்ட் என்று கூட நான் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், அதைச் சொன்னதுமே பயந்து நடுங்கி, எடுத்தார்கள் பாருங்க ஒரு ஓட்டம்!" என்று குறிப்பிட்டார்.
"தமிழக மக்கள் தற்பொழுது முழுமையாக நம் பக்கமே இருக்கிறார்கள். மக்கள் ஆதரவு நமக்கு இருக்கும்போது, நமக்கு ஏன் இந்த வீணான குதிரை பேரம், ஒட்டக பேரமெல்லாம்?" எனக் கேள்வி எழுப்பினார்.
கடந்த வாரம் கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து நிலவிய சூழல் குறித்துப் பேசிய முதலமைச்சர், காவல் துறையின் செயல்பாடுகள் மீது தனது கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்தார். "நான் கரூர் வந்தபோது, எதிர்பார்த்ததை விடவும் கூட்டம் மிக அதிகமாக உள்ளது எனப் போலீசார் எங்களிடம் முன்னரே சொல்லியிருக்கலாம் அல்லவா? அல்லது காவல்துறையினர் எங்களிடம் கேட்காமலே கூட அந்தப் பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்வை ரத்து செய்திருக்கலாமே? அதை விடுத்து, நெடுஞ்சாலையில் இருந்து போலீசாரே எங்களை முன்னின்று அழைத்து வந்த அந்த நாடகத்தை நான் அப்படியே நம்பிவிட்டேன். என் வாழ்நாளில் நான் சந்தித்த மிகப்பெரிய வலி 'கரூர் சம்பவம்' தான். போலீஸே கூட்டிவந்து விட்ட அந்த நாடகத்தை... அன்று கரூர் போலீஸை நான் முழுமையாக நம்பி ஏமாந்துவிட்டேன்."

"தவெக அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் முந்தைய ஆட்சியாளர்களின் முறைகேடுகள் குறித்தும் அவர் மேடையில் முழங்கினார். "ஊழலை எல்லாம் இந்தத் தமிழ்நாட்டில் ஒழிக்கவே முடியாது, அது மக்களின் ரத்தத்திலேயே கலந்துவிட்டது என்று சவால் விட்டவர்கள் எல்லாம் ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் நேரில் போய் பாருங்கள். இன்று ஒரு ரூபாய் கூட லஞ்சம் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்."
முந்தைய ஆட்சிக் காலங்களில் எத்தனை ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது என்றே தெரியவில்லை என்றும், தற்போதைய விசாரணைகளில் தோண்ட தோண்டப் புதிய ஊழல் புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்றும் முதலமைச்சர் விஜய் கரூரில் காரசாரமாகப் பேசினார்.
