"என் தாயைத் தவறாகப் பேசியபோது கூடப் பொறுத்துக்கொண்டேன்" - மதுராந்தகம் பிரசாரத்தில் விஜய் ஆவேசம்!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய், தனிப்பட்ட அவதூறுகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார்.
பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தமக்குத் தாய் அன்பு காட்டும் தமிழகப் பெண்களையும், தமது சொந்தத் தாயாரையும் திமுகவினரும் அவர்களின் தலைமையும் தொடர்ச்சியாகத் தவறாகவும் அவதூறாகவும் பேசி வந்தபோது தாம் அமைதியாகப் பொறுத்துக் கொண்டதாகத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பச்சைக் குழந்தைகளையும் சிறுமிகளையும் பல ஆண்டுகளாகச் சீரழித்து வந்த ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு மூடி மறைக்கப்பட்டதாக அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
தனக்கு 'திக் ஸ்கின்' உண்டு என்று குறிப்பிட்ட அவர், உலகத்தில் அதற்குத் தான் மட்டும்தான் உதாரணம் என்றும், கடந்த 34 ஆண்டுகளாக எல்லாவற்றையும் பார்த்துவிட்டுத்தான் பொதுவாழ்விற்கு வந்துள்ளதால் இந்த அவதூறுகள் தனக்குப் புதிதல்ல என்றும் கூறினார்.

சட்டமன்றத்தில் திமுகவினர் எதற்காகக் கத்துகிறார்கள் என்பதன் நோக்கம் இப்போது தனக்குப் புரிந்துவிட்டதாகவும், தன்னை எங்கு பேசவிடாமல் செய்ய நினைக்கிறார்களோ, அதற்குத் தகுந்த பதிலடியைக் கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எம்ஜிஆரின் விசுவாசிகளும் உண்மையான தொண்டர்களும் திமுகவுடன் கூட்டு சேர்வதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்று குறிப்பிட்ட அவர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவைப் போலவே தனக்கும் திமுகதான் நேரடியான அரசியல் எதிரி என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
