“எனக்கு நீங்க தான் நீதி வாங்கித் தரணும்”.. உதயநிதியிடம் கதறியழுத அமுதனின் தாய்!
கோவை பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 19 வயதான அமுதன், கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை, சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் அவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கல்லூரியில் செயல்பட்டு வந்த போதைப் பொருள் விற்பனை கும்பல் குறித்துச் செட்டிப்பாளையம் காவல்துறையினரிடம் அமுதன் ரகசியத் தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் காவல்துறை அதனைக் குற்றவாளிகளிடமே கசியவிட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் அவரைக் கொலை செய்ததாகவும் அமுதனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

செல்போன் பறிப்பு மற்றும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்தக் கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமுதனின் குடும்பத்தினரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலினிடம், "எனக்கு நீங்கள் தான் நீதி வாங்கித் தர வேண்டும்" என்று அமுதனின் தாயார் கதறி அழுதார். தகவல்களைப் பாதுகாக்கத் தவறிய காவல்துறையின் அலட்சியப் போக்கே இந்தக் கொலைக்குக் காரணம் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இதற்குக் காவல்துறை மற்றும் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் அமுதனின் மரணம் குறித்து விரிவாகப் பேசவுள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரப்போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகச் செட்டிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொலையில் தொடர்புடைய சக கல்லூரி மாணவர்கள் உட்பட 9 பேரை இதுவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
