”உங்க சாதிக்காரர்களுக்கு முடி வெட்ட மாட்டேன்”.. பட்டியிலன இளைஞர்களுக்கு நேர்ந்த கொடுமை..!!

 
ஆந்திரா சாதி கொடுமை

 பட்டியலின இளைஞர்களுக்கு முடி திருத்தம் செய்ய முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் அருகே நெல்லிப்பட்லா என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பல்வேறு  சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்குத் தார்ப் பாய் போட்டு மூடிய நிலையில் ஒரு சிறிய சலூன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் குறிப்பிட்ட சில சாதியினர்களுக்கு மட்டும் முடி திருத்தம் செய்யப்படும் என்றும் பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்யப்படாது எனவும் கூறப்படுகிறது.

பட்டியலின இளைஞர்களுக்கு முடி  திருத்தம் செய்த  போது

இந்த நிலையில் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் அக்கடைக்கு முடி திருத்தம் செய்யச் சென்றுள்ளனர். அதற்கு சலூன் கடை உரிமையாளர், "உங்களுக்கு எல்லாம் முடி திருத்த முடியாது" என அவர்களுடைய சாதிப் பெயரைச்  சொல்லித் திருப்பி அனுப்பியுள்ளார்.

பின்னர் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த தாசில்தார் மனோஜ்குமார், காவல்துறையினர் உதவியுடன் அந்த கிராமத்திற்குச் சென்றுள்ளார். அங்குக் கூட்டத்தில் பேசிய தாசில்தார் மனோஜ்குமார், "தீண்டாமைக்கு எதிரான சட்டம் இருப்பது எங்களுக்குத் தெரியாது என்று கூறி தப்பித்துவிட முடியாது. தீண்டாமை ஒரு கொடுமையான செயல். மீறினால் சிறைக்குத்தான் செல்ல வேண்டும்" என எச்சரிக்கை விடுத்து, அந்த மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து  அதே சலூன் கடைக்குப் பட்டியலின இளைஞர்களை அழைத்துச் சென்று முடி திருத்தம் செய்து அனுப்பி வைத்துள்ளார். தாசில்தாரின் இந்த செயல் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

From around the web