“10-வது போரை நிறுத்துவேன்...” இஸ்ரேல்-லெபனான் இடையே 10 நாள் போர்நிறுத்தம் - டிரம்ப் அதிரடி!
மத்திய கிழக்கில் கொழுந்துவிட்டு எரிந்த போர் நெருப்பைத் தற்காலிகமாக அணைக்கும் வகையில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் வாஷிங்டனில் சந்தித்துப் பேசியது, இந்த அமைதி முயற்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததோடு, லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இந்நிலையில், லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவன் விடுத்த கோரிக்கையையும், தீவிர ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளையும் அடுத்து இந்த 10 நாள் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

இந்த 10 நாள் போர்நிறுத்தம் மூலம் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. “உலகம் முழுவதும் இதுவரை 9 போர்களை நிறுத்தியது எனக்குக் கிடைத்த கௌரவம். இது நான் நிறுத்தப்போகும் 10-வது போர். இதனை நிச்சயம் செய்து முடிப்போம்!” என டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உயர்நிலை பேச்சுவார்த்தை: அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதாக லெபனான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் போர்நிறுத்தம் ஒரு நிரந்தர அமைதிக்கு வித்திடுமா அல்லது 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் போர் தொடருமா என்பது உலக நாடுகளின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
