“திமுக தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்” - ஸ்டாலின் அறிவிப்பு - மா.செக்கள் கூட்டத்தில் எச்சரிக்கை!

 
ஸ்டாலின் திமுக ஸ்டாலின் திமுக

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த எதிர்பாராத தோல்வி குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். தோல்விக்குத் தானே முழுப் பொறுப்பு என்று கூறியுள்ள அவர், கட்சி நிர்வாகிகளுக்குக் கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.  "நடந்து முடிந்த தேர்தலில் திமுக பெற்ற தோல்விக்குத் தலைவனாக நானே முழுப் பொறுப்பேற்கிறேன். எங்கே தவறு நடந்தது என்பது குறித்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது" எனத் தெரிவித்தார். தேர்தல் பணியில் சுணக்கம் காட்டிய மற்றும் மக்களிடம் திமுக-வின் திட்டங்களைக் கொண்டு சேர்க்கத் தவறிய மாவட்ட நிர்வாகிகள் மீது அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். கட்சிப் பணிகளில் சுணக்கமாக இருந்தவர்களுக்கு ஸ்டாலின் விடுத்துள்ள எச்சரிக்கை தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின்

"கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாதவர்கள், செயல்படத் தகுதி இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் மனப்பூர்வமாகப் பதவியிலிருந்து விலகிக் கொள்ளலாம். அவர்கள் இடத்திற்குப் புதிய ரத்தம் பாய்ச்சப்படும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தேர்தல் தோல்விக்குக் காரணமானவர்கள் மற்றும் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எதிர்க்கட்சியாகத் தனது கடமையைச் சரியாகச் செய்யப் போவதாகவும், தவெக அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் குரலாக திமுக ஒலிக்கும் என்றும் அவர் கூட்டத்தில் உறுதிபடக் கூறினார்.

ஸ்டாலின்

ஆட்சி அதிகாரத்தை இழந்த பிறகு, கட்சியை மீண்டும் வலுப்படுத்த ஸ்டாலின் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள் திமுக வட்டாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.