“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி வழங்கும் வரை அசைவம் சாப்பிட மாட்டேன்" – அமைச்சர் ராஜ்மோகன் சபதம்!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் வரை, தான் அசைவ உணவுகளை உட்கொள்ளப் போவதில்லை எனத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சபதம் எடுத்துள்ளதாகத் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி மற்றும் திரைப்பட இயக்குநர் விக்ரமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய இயக்குநர் விக்ரமன், அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் வாரந்தோறும் அவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இதைக் குறிப்பிட்ட லயோலா மணி, அமைச்சர் ராஜ்மோகன் தீவிர அசைவப் பிரியர் என்ற போதிலும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு முக்கிய தனிப்பட்ட முடிவை எடுத்துள்ளதாகக் கூறினார். "அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டத்தைக் முதலமைச்சர் முறைப்படி தொடங்கி வைக்கும் நாள் வரை, தாம் அசைவ உணவைத் தொடப் போவதில்லை என்ற தீவிர முடிவில் அமைச்சர் இருக்கிறார். தற்போது வரை அவர் சைவ உணவை மட்டுமே உட்கொண்டு வருகிறார்" என லயோலா மணி உருக்கமாகத் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்காகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் எடுத்துள்ள இந்த விசித்திரமான சபதம், சமூக வலைதளங்களிலும் மக்கள் மத்தியிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
