‘அங்கேயே என்கவுன்ட்டர் செய்திருப்பேன்!’ - தவெக எம்.எல்.ஏ. விவகாரத்தில் ஜெயக்குமார் ஆவேசம்!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்குச் சர்ச்சைக்குரிய வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதுடன், அவரது முகாம் அலுவலக இல்லத்திற்குத் தகாத நேரத்தில் சென்று தகராறு செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மிகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது எழுந்துள்ள புகார்கள் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். "மாவட்ட ஆட்சியரின் வீடு தேடிச் சென்று தகாத நேரத்தில் பிரச்சனை செய்பவர்களைச் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க முடியாது. நான் மட்டும் அந்த இடத்தில் கலெக்டராக இருந்திருந்தால், அங்கேயே கட்டி வைத்து என்கவுன்ட்டர் செய்திருப்பேன்" என ஜெயக்குமார் ஆவேசமாகக் கூறினார்.

தற்போதைய ஆட்சியில் உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை யாருக்கும் உரிய பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உடனடியாகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக சார்பில் தலைமைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியும் தலைமைச் செயலாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதால், ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள அமைச்சர் ராஜ்மோகன், "இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தச் சர்ச்சை தொடர்பாக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் விளக்கம் அளித்திருந்த போதிலும், எதிர்க்கட்சிகளின் தொடர் புகார்கள் காரணமாகத் தமிழக அரசியலில் இந்த விவகாரம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
