உலகக்கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி எப்போது?

 
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய 3 நாடுகள் இணைந்து இந்த உலகக்கோப்பையை நடத்தவுள்ளன. இதில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்று, 12 மைதானங்களில் 57 போட்டிகள் நடைபெறுகின்றன.

இத்தொடர் 2027 அக்டோபர் 2ம் தேதி தொடங்கி நவம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

2027 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்

அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் ஒரு தகுதிச்சுற்று அணியும்; 'பி' பிரிவில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, வங்காளதேசம் மற்றும் மற்றொரு தகுதிச்சுற்று அணியும் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அக்டோபர் 7ஆம் தேதி கேப்டவுனில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான லீக் ஆட்டம் அக்டோபர் 10ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது.