ஐசிசி ஒருநாள் தரவரிசை.. இந்தியா மீண்டும் முதலிடத்தைத் தக்கவைத்து சாதனை!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான வருடாந்திர புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, உலக அளவில் முதலிடத்தை கம்பீரமாகத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
கடந்த ஓராண்டு காலப் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இந்த புதிய தரவரிசையின்படி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒரு புள்ளி குறைந்து 118 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அதே நேரத்தில், கடந்த தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி 2 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று, 113 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

இதன் மூலம், முதலிடத்தில் இருக்கும் இந்திய அணிக்கும், இரண்டாம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணிக்கும் இடையிலான புள்ளி வித்தியாசம் 8-லிருந்து 5 ஆகக் குறைந்துள்ளது. உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி எவ்வித மாற்றமுமின்றி 109 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.
இந்த வருடாந்திர தரவரிசைப் புதுப்பித்தலில், முதல் 10 இடங்களுக்குள் ஒரே ஒரு முக்கிய மாற்றம் மட்டுமே நிகழ்ந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி 4 புள்ளிகள் உயர்ந்து 102 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால், 4 புள்ளிகளை இழந்து 98 புள்ளிகளுடன் தவிப்பிற்குள்ளான பாகிஸ்தான் அணி 5-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இலங்கை (96 புள்ளிகள்) 6-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் (93 புள்ளிகள்) 7-வது இடத்திலும், இங்கிலாந்து (89 புள்ளிகள்) 8-வது இடத்திலும், பங்களாதேஷ் (84 புள்ளிகள்) 9-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (74 புள்ளிகள்) 10-வது இடத்திலும் நீடிக்கின்றன.
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் மட்டுமல்லாமல், கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையிலும் இந்திய அணியே உலகின் நம்பர் 1 அணியாகத் திகழ்கிறது. இதன் மூலம் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் இரண்டு வடிவங்களிலுமே இந்திய அணி உலகளவில் முதலிடத்தை தன் வசம் வைத்துள்ள பெருமையைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
