பெற்றோர்களே உஷார்... ஐஸ்கிரீம் கோனுக்குள் 3 இன்ச் நீளப் புழு... அதிர்ச்சி வீடியோ!
மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் கல்யாண் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், அங்குள்ள கடை ஒன்றில் பேக் செய்யப்பட்ட சாக்லேட் ஐஸ்கிரீம் கோன் ஒன்றை வாங்கியுள்ளான். அந்த ஐஸ்கிரீமை ஆசையாகச் சாப்பிடத் தொடங்கிய அச்சிறுவனுக்கு, அதன் உள்ளே ஏதோ வித்தியாசமாக இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவன் அதனை உற்று நோக்கியபோது, ஐஸ்கிரீமுக்குள் நீளமான புழு ஒன்று உறைந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளான்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த ஐஸ்கிரீமைச் சோதனை செய்தபோது, அதில் சுமார் 3 இன்ச் நீளமுள்ள தடித்த புழு ஒன்று ஒட்டியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த சிறுவனின் குடும்பத்தினர், உடனடியாக ஐஸ்கிரீம் வாங்கிய கடைக்குச் சென்று இதுகுறித்து முறையிட்டுள்ளனர். ஆனால், அந்த கடைக்காரரோ இதற்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி பொறுப்பேற்க மறுத்துவிட்டார்.
இந்த அலட்சியமான செயலால் கோபமடைந்த சிறுவனின் உறவினர்கள், பாதிக்கப்பட்ட ஐஸ்கிரீமின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். மேலும், இது போன்ற உணவுப் பொருட்கள் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, அந்த நிறுவனத்தை உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
