“வாய்ப்பு கிடைத்தால் ஈரானின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவேன்!” - ட்ரம்ப் அறிவிப்பு!
மேற்காசியாவில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய போர், தற்போது மிக மோசமானக் கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் எண்ணெய் வளங்கள் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகள் மீது குறிவைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அதிபர் டிரம்ப், ஈரானுடனானப் போர் குறித்துச் சில அதிரடி கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், "ஈரானின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கைப்பற்றுவதன் மூலம் பெரிய லாபத்தை ஈட்ட முடியும். ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து, ஈரானின் எண்ணெய் வளங்களை அமெரிக்கக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே எனது விருப்பம்" எனத் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான 'கார்க் தீவை' அமெரிக்கப் படைகள் எளிதாகக் கைப்பற்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர் தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ள ஈரான், தற்போது 10 அம்சங்கள் கொண்ட அமைதித் திட்டத்தை மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் முன்மொழிவுகளை வழங்கியுள்ளதாக டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், ஈரானின் முன்மொழிவுகள் "போதுமானதாக இல்லை" என்று அமெரிக்க அதிகாரிகள் ஒருபுறம் நிராகரித்து வரும் சூழலில், பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய இந்த அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் சுகாதார அமைச்சகத் தகவல்படி, இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சால் அந்நாட்டின் உள்கட்டமைப்பு பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளது.

டிரம்பின் இந்த அறிவிப்பால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 110 டாலரைத் தாண்டி வர்த்தகமாகி வருவது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
