“ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால்...” - டிரம்ப் எச்சரிக்கை... ஜெர்மனி அதிபருடன் கடும் மோதல்!

 
ட்ரம்ப் ட்ரம்ப்

 ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், அப்படி நடந்தால் ஒட்டுமொத்த உலகமும் ஈரான் வசம் பணயக் கைதியாகிவிடும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் சமீபத்தில் ஈரான் போர் மற்றும் அமெரிக்காவின் உத்திகள் குறித்துக் கூறிய கருத்துக்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதைச் சரி என்று நினைக்கிறார். அவருக்கு எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பதே தெரியவில்லை. ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், ஒட்டுமொத்த உலகமும் பணயக் கைதியாகிவிடும்" என டிரம்ப் சாடியுள்ளார்.

ட்ரம்ப்

முந்தைய அமெரிக்க அதிபர்கள் செய்யத் தவறியதை (ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை மற்றும் முற்றுகை) தான் தற்போது செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா "அவமானப்படுத்தப்படுவதாக" விமர்சித்திருந்தார்.

அமெரிக்காவிற்கு இந்தப் போரிலிருந்து வெளியேற முறையான 'எக்சிட் பிளான்' இல்லை என்று மெர்ஸ் குற்றம் சாட்டினார். ஈரான் நினைத்ததை விட வலிமையாக இருப்பதாகவும், அவர்கள் மிகத் திறமையாகப் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் மெர்ஸ் குறிப்பிட்டது டிரம்பிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப்

ஈரான் முன்மொழிந்த சமீபத்திய போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது. அதற்கு முக்கியக் காரணமாக, அந்த ஒப்பந்தத்தில் ஈரானின் அணு ஆயுதத் திட்டம் குறித்து எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது ஈரானியக் கடற்படை முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில், ஈரான் பொருளாதார ரீதியாகச் சரிந்து வருவதாக டிரம்ப் கூறி வருகிறார்.