நம்ம CM க்கு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடே வெகுண்டெழும் - பிரேமலதா பேட்டி!
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த், காவிரிப் பிரச்சினை, விவசாயிகள் நலன், சட்டசபை மாண்பு மற்றும் முதலமைச்சர் குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
காவிரி விவகாரம் இரு மாநிலப் பிரச்சினை என்பதால், இதற்கான தீர்வு ஒன்றிய அரசிடமே உள்ளது. எனவே, நீட், காவிரி மற்றும் மேகதாது பிரச்சினைகளுக்காக அனைத்துக் கட்சியினரையும் அழைத்துச் சென்று முதலமைச்சர் பிரதமரைச் சந்திக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாகச் செயல்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

வேளாண்மைத் துறை அமைச்சரின் தொகுதியிலேயே மழைநீரில் நெல் மணிகள் மிதக்கும் அவலை நிலை உள்ளது. விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் 2 முதல் 3 நாட்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போதைய ஆட்சியில் பல நாட்கள் தாமதமாவதால் பல லட்சம் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு ஒரு அவமதிப்பு அல்லது தலைகுனிவு ஏற்பட்டால் தமிழக மக்களாகிய நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்; தமிழ்நாடே வெகுண்டெழும்.

தமிழக சட்டப்பேரவையில் 6 முறை முதலமைச்சராக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளில், சட்டசபையில் அவரை நினைவுகூர்ந்திருக்க வேண்டும். அது இந்த அவைக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கும்.
ஆட்சியாளர்கள் மாறினாலும் மக்கள் விரும்பும் நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும். திட்டங்களின் பெயர்களை மாற்றுவதில் தவறில்லை, ஆனால் அத்திட்டங்கள் தொடர்வதே முக்கியம். சட்டமன்ற உறுப்பினர்களின் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் முறையைக் கொண்டுவர வேண்டும்.
