“தருமபுரியில் சௌமியா வென்றால் அது அதருமபுரியாக மாறும்!” - ராமதாஸ் ஆவேசம்!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள உருக்கமான மற்றும் ஆவேசமான அறிக்கை, தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளில் பாட்டாளிச் சொந்தங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணிக்கு எதிராகத் தனது கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
“நான் சிந்தி வளர்த்த கொள்கைகளை அன்புமணி இன்று பல கோடிகளுக்கு விற்று, 'சமூக நீதி வியாபாரமாக' மாற்றிவிட்டார். ஒவ்வொரு தேர்தல் சீட்டையும் அடகு வைத்துவிட்டார்” என ராமதாஸ் சாடியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தனது தந்தை கலைஞரை இறுதிவரை கவனித்துக் கொண்டதையும், உதயநிதி தனது தந்தையைக் கௌரவப்படுத்துவதையும் சுட்டிக்காட்டிய ராமதாஸ், “எனக்கு வாய்த்த பிள்ளையோ நான் உயிரோடு இருக்கும்போதே என்னைச் செத்துப்போனதாக நினைத்து அரசியல் செய்கிறார்” என வேதனை தெரிவித்துள்ளார்.
தருமபுரி தொகுதியில் போட்டியிடும் தனது மருமகள் சௌமியா குறித்துப் பேசுகையில், “தருமபுரியில் சௌமியா வெற்றி பெற்றால், அந்தப் புண்ணிய பூமி விரைவில் 'அதருமபுரி' என்று பெயர் எடுக்கும்” என அவர் எச்சரித்துள்ளார்.

“மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீர்கள். அந்தச் சின்னத்திற்குள் இப்போது துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது” என்று கூறிய அவர், அன்புமணி தலைமையிலான அணி போட்டியிடும் 18 தொகுதிகளிலும் அவர்களைத் தோற்கடிக்குமாறு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் தலைமையிலான ‘ஐயா பாமக’ (கேஸ் சிலிண்டர் சின்னம்) மற்றும் அன்புமணி தலைமையிலான ‘அன்புமணி பாமக’ (மாம்பழம் சின்னம்) என இரு பிரிவுகளாகப் பிரிந்து களம் காணும் நிலையில், இன்று மாலை பிரசாரம் முடிவடைய உள்ள சூழலில் வெளியாகியுள்ள இந்த அறிக்கை வன்னியர் வாக்கு வங்கியில் பெரும் பிளவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
