மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் உதவும்” - டி.கே. சிவகுமார்
சென்னை கோவளத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த 31-வது தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை குறித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
"நதிநீர் நம்மை ஒன்றிணைக்க வேண்டுமே தவிர, பிரிக்கக் கூடாது. நாங்கள் புகார் கூற வரவில்லை; நாட்டின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக வந்துள்ளோம். எங்களுக்குத் தேவை நியாயம் மட்டுமே. நதிநீர் பங்கீடு என்ற நிலையிலிருந்து 'நதிநீர் ஒத்துழைப்பு' என்ற நிலைக்கு நாம் நகர வேண்டிய நேரம் இது" என்று குறிப்பிட்டார்.

"மேகதாதுவில் அணை கட்டினால் அது கர்நாடகாவிற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அங்கிருந்து வெளியேறும் ஒவ்வொரு சொட்டு நீரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விவசாயிகளுக்கே உதவும். அணை இல்லாததால் உபரிநீர் வீணாகக் கடலில் கலக்கிறது. உங்களுக்கு உதவ நீங்கள் எங்களுக்கு உதவுங்கள்" எனக் கோரிக்கை விடுத்தார்.
ஆந்திர மாநிலத்தின் எதிர்ப்பு காரணமாகக் கிருஷ்ணா நதிநீரைத் தங்களால் முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நதிநீர்ப் பிரச்சினைகளில் அனைவரும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதுடன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் கர்நாடகா உடனடியாக அமல்படுத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.
முல்லைப்பெரியார் அணையின் நீர்மட்டத்தைச் சட்டப்பூர்வமாக 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். போதைப்பொருட்கள் ஊடுருவலைத் தடுக்கத் தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைந்த கூட்டமைப்பு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
