இறந்தவர் பெயரில் உள்ள LPG இணைப்பு இருந்தால் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்!
இறந்தவர்களின் பெயரில் இன்னமும் பயன்பாட்டில் இருந்துவரும் எல்.பி.ஜி எரிவாயு இணைப்புகளுக்கான சிலிண்டர் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.
எண்ணெய் நிறுவனங்கள் தற்போது சிலிண்டர் விநியோகத்தில் டிஜிட்டல் முறையிலான சரிபார்ப்பு மற்றும் ஓடிபி நடைமுறையைக் கட்டாயமாக்கியுள்ளன. இதன்காரணமாக, கே.ஒய்.சி புதுப்பிக்கப்படாத மற்றும் முறைப்படி பெயர் மாற்றம் செய்யப்படாத ஆயிரக்கணக்கான எல்.பி.ஜி இணைப்புகள் தற்போது தற்காலிகமாக முடக்கப்பட்டு வருகின்றன.

இறந்த குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள எரிவாயு இணைப்புகளைப் பயன்படுத்துவோர், உடனடியாகப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இறப்புச் சான்றிதழ் மற்றும் தகுந்த அடையாள ஆவணங்களை எரிவாயு முகவரிடம் சமர்ப்பித்து, இணைப்பைத் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து உடனடியாகப் பெயர் மாற்றம் செய்யாவிட்டால், குறிப்பிட்ட எல்.பி.ஜி இணைப்புகள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
