"வேட்பாளரை மாற்றலைன்னா தேர்தலைப் புறக்கணிப்போம்!" - திருச்சியில் அதிமுக-விற்கு எதிராக போர்க்கொடி!

 
திருச்சி திருச்சி

திருச்சி மேற்குத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் (அமமுக-விற்கு ஒதுக்கப்பட்ட நிலையில்) அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் இன்று திரண்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மேற்குத் தொகுதியில் சுமார் 60,000-க்கும் அதிகமான தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு அதிமுக கூட்டணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

தங்களது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால், வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப் போவதாக அச்சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி இபிஎஸ்

நிர்வாகிகள் பங்கேற்பு: இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

திருச்சி மேற்குத் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கே.என். நேரு மீண்டும் களம் இறங்கியுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் (அமமுக சார்பில்) எம். ராஜசேகரன் (முன்னாள் தொட்டியம் எம்.எல்.ஏ) வேட்பாளராகப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், தொகுதிக்குள் நிலவும் சமூக ரீதியான அதிருப்தி அதிமுக கூட்டணிக்குச் சவாலாக மாறியுள்ளது.

எடப்பாடி

திருச்சி மேற்குத் தொகுதியின் வெற்றியைத் தீர்மானிப்பதில் தேவேந்திர குல வேளாளர் மற்றும் முத்தரையர் சமூக வாக்குகளுக்குப் பெரும் பங்கு உண்டு. தற்போது எழுந்துள்ள இந்தப் போராட்டம், வாக்குகளைப் பிரிக்கும் அல்லது ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அமையும் வாய்ப்புள்ளதால் அதிமுக தலைமை அதிர்ச்சியில் உள்ளது.