பெற்றோரைக் கைவிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை... புதிய சட்டத்தை நிறைவேற்றியது கேரள அரசு!

 
பென்ஷன் முதியோர்

மூத்த குடிமக்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யும் வகையில் ‘கேரளம் மூத்த குடிமக்கள் (பராமரிப்பு மற்றும் உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2026’ கேரள சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், பெற்றோரிடமிருந்து சொத்துகளைப் பெற்றுக்கொண்டு அவர்களைக் கைவிடும் அல்லது துன்புறுத்தும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.

பெற்றோரின் சொத்துகளைப் பெற்ற பிறகு அவர்களைப் பராமரிக்கத் தவறுதல், கைவிடுதல் அல்லது கொடுமைப்படுத்துதல் மற்றும் மூத்த குடிமக்களின் சொத்துகளைச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்துதல் போன்ற குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50,000 வரை அபராதமும் விதிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.

முதியோர் பென்ஷன்

கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு முழுமையாக நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் வி.டி.சதீசன், தங்களது பிள்ளைகளை வளர்ப்பதற்காகத் தாய்மார்கள் மற்றும் பெற்றோர் படும் கஷ்டங்களை வருங்காலத் தலைமுறையினர் உணர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“பிள்ளைகள் பெரிய நிலைக்கு வந்த பிறகு பெற்றோரைப் புறக்கணிக்கும் போக்கு ஒருபோதும் இருக்கக் கூடாது; பெற்றோரை அருகிலேயே வைத்துப் பராமரிக்கும் புதிய கலாச்சாரம் உருவாக வேண்டும். கேரளாவில் எந்த ஒரு முதியவரும் தனிமையில் விடப்படக் கூடாது என்பதே எனது மிகப்பெரிய கனவு” என அவர் குறிப்பிட்டார்.

முதியோர்

நாட்டிலேயே முதன்முறையாகக் கேரளாவில் மூத்த குடிமக்களுக்கெனத் தனித் துறை உருவாக்கப்பட்டதையும், முதியோருக்கான பராமரிப்பு இல்லங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சட்டம் மூத்த குடிமக்களின் நலனுக்குப் பெரும் பாதுகாப்பு அரணாக அமையும் என வரவேற்கப்படும் அதே வேளையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள மத்தியச் சட்டமான ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007’ மற்றும் ‘லிவிங் வில்’ தொடர்பான விதிகள் ஆகியவற்றுடன் சட்டரீதியான முரண்பாடுகள் ஏற்படாத வகையில் விதிகள் மற்றும் ஒப்புதல் நடைமுறைகள் கவனமாகக் கையாளப்பட வேண்டும் என்ற சட்ட வல்லுநர்களின் கருத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.