போட்றா வெடிய... தங்கம் சவரனுக்கு மேலும் ரூ.3,000 வரை குறைய வாய்ப்பு... சர்வதேச சந்தையில் கடும் வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவுக்குப் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியச் சந்தையிலும் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,000 வரை குறைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 121 டாலர் குறைந்து 3,742 டாலராக வர்த்தகமாகி வருகிறது (தொடர் சரிவில் 3,707 டாலர் வரையும் சென்று, கடந்த ஓராண்டிற்கும் மேலான குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளது). அதேபோல், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் 1 டாலர் சரிந்து 45 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதும், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மேலும் உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்து விலையைக் கீழே தள்ளியுள்ளன.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு சவரன் (8 கிராம்) ரூ.97,720-க்கு (கிராம் ரூ.12,215) விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,326 என்ற அளவில் இருந்தது.

சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தப் பெரும் வீழ்ச்சியின் தாக்கம் இந்தியச் சந்தையிலும் நேரடியாக எதிரொலிக்க உள்ளது. இதன் காரணமாக, இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,000 வரை அதிரடியாகக் குறையக்கூடும் என நகை வியாபாரிகள் மற்றும் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, தற்போது ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்குக் கீழ் குறைந்து மேலும் சரிவை நோக்கிச் செல்வது நகைப் பிரியர்கள் மற்றும் திருமண வீட்டார் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.
