"என் பேச்சைக் கேட்கலைன்னா ஃபெயில் ஆக்குவேன்" - மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கணித ஆசிரியர்!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், 8-ஆம் வகுப்பு மாணவியை மதிப்பெண் தருவதாக மிரட்டித் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ள கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ராஜ்கோட்டில் உள்ள அரசு நடத்தும் அன்னை தெரசா பள்ளி எண் 88-ல் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் மோஹித் டேங்க். இவர் அப்பள்ளியில் பயின்ற 14 வயது சிறுமியிடம் தொடர் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

"நான் சொல்வதைக் கேட்டால் கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தருவேன், மீறினால் ஃபெயில் ஆக்கிவிடுவேன்" என்றும், தன்னைத் தானே பிளேடால் வெட்டிக்கொள்வேன் என்றும் கூறி அச்சிறுமையை ஆசிரியர் மிரட்டியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் சிறுமியைத் தனது காரில் ஒரு தனிமையான அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அடிக்கடி காலியான வகுப்பறைகளுக்கும் வரவழைத்துத் துன்புறுத்தியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 23 அன்று மாணவி வழக்கத்திற்கு மாறாகப் பதற்றத்துடன் காணப்பட்டதைக் கவனித்த அவரது தாய் விசாரித்த பின்னரே இக்கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், தாலுகா காவல்துறையினர் அக்டோபர் 2 அன்று மோஹித் டேங்கைக் கைது செய்தனர். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
