"ஆதரித்தால் ஏசி அறையில் சோஃபா...எதிர்த்தால் சிறைக் கொட்டடி" – அன்பில் மகேஷ் கொந்தளிப்பு!
விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டதற்குத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இதுதான் த.வெ.க. அரசின் மாற்றமா?" "தன்னை ஆதரித்தால் ஏசி அறையில் சோஃபா! ஜனநாயக வழியில் எதிர்த்தால் சிறைக் கொட்டடி! இதுதான் த.வெ.க. அரசின் மாற்றம்" எனத் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.
விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவம் இல்லை: விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரை அராஜகமான முறையில் கைது செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய அதிகார வன்முறைகள் இனிமேலும் தொடரக் கூடாது எனக் குறிப்பிட்ட அன்பில் மகேஷ், கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
