"விஜய்க்கு ஓட்டு போட்டால் பனையூர் வாசலில் தான் நிற்கணும்!" - அன்புமணி
பெரம்பூர் தொகுதியில் நட்சத்திர வேட்பாளராகக் களமிறங்கியுள்ள நடிகர் விஜயை எதிர்த்து, பாமக சார்பில் கவிஞர் திலகபாமா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகச் சென்னையில் வாக்குச் சேகரித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விஜயை மறைமுகமாகச் சாடினார்.
பிரசாரத்தின் போது தொண்டர்களிடையே பேசிய அன்புமணி ராமதாஸ், "பாமக வேட்பாளர் திலகபாமா ஒரு சாதாரண வேட்பாளர் அல்ல; அவர் ஒரு போராளி. அன்றாடம் களத்தில் இறங்கி, வஞ்சிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் அவர்."

"உங்களால் பார்க்க முடியாத, பேச முடியாத, எளிதில் அணுக முடியாத ஒரு எம்.எல்.ஏ உங்களுக்குத் தேவையா? விஜய்க்கு வாக்களித்தால் நீங்கள் அவரைச் சந்திக்கப் பனையூர் வாசலில் தான் காத்து நிற்க வேண்டியிருக்கும். ஆனால், திலகபாமாவை நீங்கள் தேர்வு செய்தால், அவர் உங்கள் குறைகளைக் கேட்க உங்கள் வீட்டு வாசலிலேயே வந்து நிற்பார். சாதாரண மக்களுக்கான பிரதிநிதியாக அவர் இருப்பார்" எனத் தெரிவித்தார்.

பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவர் விஜய் போட்டியிடுவதால், ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் இந்தத் தொகுதியின் மீது திரும்பியுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக மற்றும் த.வெ.க என மும்முனைப் போட்டி நிலவும் சூழலில், பாமக தனது வேட்பாளரான திலகபாமாவின் களப்பணிகளை முன்னிறுத்தி தீவிரமாக வாக்குச் சேகரித்து வருகிறது. மறுபுறம் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
