இடர்களை நீக்கி வெற்றி தரும் விஜயதசமி - இப்படி வழிபட்டால் நிச்சயம் பலன் உண்டு!

 
ஆயுதபூஜை விஜயதசமி

விஜயம் என்கிற வெற்றியைத் தருகிற தினம் விஜயதசமி. பாண்டவர்களுக்கு மட்டுமல்ல... தன்னை மனமுருகி வேண்டும் யாவர்க்கும் விஜயத்தைத் தருபவள் அன்னை. அதனால் விஜயதசமி தினத்தை தவற விடாமல் வேண்டும் வரத்தைப் பெறுங்கள். விஜயதசமி வழிபாடு எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலாம் வாங்க.

புரட்டாசி மாத அமாவாசை தொடங்கி அடுத்து வரும் 10 நாட்களும் அம்பிகை கொலுவாக வீற்றிருக்கிறாள். மகிஷாசுரன் என்னும் அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தான். அவர்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்து 9  நாட்கள் உக்கிரமாக போர் நடந்தது. 10ம் நாளில் அம்பிகை மகிஷாசுரனை அழித்து வெற்றிபெற்றாள். இந்த நாளையே வெற்றித் திருநாளாக 'விஜயதசமி' யாக கொண்டாடுகிறோம்.

விஜயதசமி

வட இந்தியாவை பொறுத்தவரை விஜயதசமி நாளை, ராவணனை ராமபிரான் அழித்த நாளாக 'ராம்லீலா' எனக் கொண்டாடுகின்றனர். மகிஷாசுரன் என்ற அரக்கனால்  மூவுலகிலும் நிம்மதி குறைந்தது. இதையடுத்து துர்க்காதேவி, அசுரனை அழித்து அனைவருக்கும் நிம்மதியை பெற்றுத் தந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த நாளில் எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றியாக முடியும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. இத்திருநாளில் தொழில் நிறுவனங்களில் புதிய கணக்கு தொடங்குவார்கள். இதனால் லாபம் சேரும் என்பது ஐதீகம். அதே போல் விஜயதசமி தினம் கல்விக்கு உகந்த நாளாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

விஜயதசமி

இந்த நாளில் தான் மழலைகளுக்கு முதல்முதலாக எழுத்தறிவிக்கப்படும். இந்நிகழ்வுக்கு வித்தியாரம்பம் எனப் பெயர். இதற்காக  நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புதிய வகுப்புகள் தொடக்கம் என அனைத்து சுபநிகழ்வுகளையும் தொடங்கலாம். தாம்பூலத்தில்  பச்சரிசியைப் பரப்பி அதில் தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்து, தமிழ் மொழியின் முதல் எழுத்தை எழுதுவது வழக்கமாக இருந்து வருகிறது. அத்துடன் அவரவர்களின் அபிமான தெய்வங்களின் திருநாமத்தையும் எழுதச் செய்வர். இப்படி கல்வியை தொடங்கும் குழந்தைகள் கல்வியில் பெரும் பேறோடும், புகழோடும் விளங்குவர் என்பது ஐதீகம்.