“கடிதம் எழுதினால் புத்தகங்களை அள்ளிக் கொடுக்கத் தயார்!” - மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு!
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகங்கள் மற்றும் படிப்பகத்தினர் கடிதம் எழுதினால் அவர்களுக்குப் புத்தகங்களை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2018-ம் ஆண்டில் திமுக தலைவராகப் பொறுப்பேற்றது முதல், தம்மைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து மற்றும் சால்வைகளுக்குப் பதிலாகப் புத்தகங்களையே அன்பளிப்பாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்படித் தொண்டர்களாலும் பொதுமக்களாலும் இதுவரை அன்பளிப்பாக வழங்கப்பட்ட 6 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள், தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் வாசிப்பிற்காகவும், தாம்பரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நூலகத்திற்காகவும் மேலும் 5,000 புத்தகங்களை இன்று அவர் வழங்கியுள்ளார்.
"புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், பொது நூலகங்கள், கிராமப்புற படிப்பகங்கள் கடிதம் எழுதினால், அவர்களுக்கும் புத்தகங்களை அள்ளிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். வாசிப்புப் பழக்கம் பெருகினால் மட்டுமே தமிழ்நாடு தன் சுய அடையாளத்தை இழக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்" என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
