'கேட்' தேர்வு விண்ணப்பத் தேதி மாற்றம் - ஐ.ஐ.டி. புதிய அறிவிப்பு!
2027-ம் ஆண்டுக்கான கேட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கும் தேதியைத் தேர்வு நடத்தும் சென்னை ஐ.ஐ.டி. மாற்றம் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் கேட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அபராதக் கட்டணமின்றி விண்ணப்பிக்கச் செப்டம்பர் 27-ஆம் தேதி கடைசி நாளாகும். தாமதக் கட்டணத்துடன் அக்டோபர் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 21 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலை இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கான இந்த 2027-ஆம் ஆண்டு கேட் தேர்வைச் சென்னை ஐ.ஐ.டி. நடத்துகிறது. கேட் தேர்வு வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 6, 7, 13, 14, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
