சென்னை ஐஐடி இணையதளத்தை முடக்கிய மாணவர்... வாய்ப்பு கிடைக்காததால் தன்னுடைய திறமையை நிரூபிக்கச் செய்த விபரீதம்!
சென்னை ஐஐடியின் இணையதளம் திடீரென ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்ட சம்பவம், இணைய உலகிலும் கல்வி வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடி மற்றும் கான்பூர் ஐஐடி ஆகிய இரண்டும் இணைந்து 'இளநிலை சைபர் செக்யூரிட்டி' என்ற புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. 13 வயது முதல் கோடிங் செய்து வரும் சைபர் பாதுகாப்பு ஆர்வலரான ஒரு மாணவர் இப்படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளார். அனைத்து சான்றிதழ்கள் மற்றும் கட்டணங்களைச் செலுத்தியும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கான்பூர் மற்றும் சென்னை ஐஐடி நிர்வாகங்களுக்கு அவர் பல மின்னஞ்சல்கள் அனுப்பியும் எந்தப் பதிலும் வராததால், தனது திறமையை நிரூபிக்கவும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கவும் இணையதளத்தை முடக்கும் முடிவை எடுத்துள்ளார்.
சென்னை ஐஐடியின் மாணவர் மற்றும் ஊழியர்களுக்கான சேவை இணையப் பக்கத்தை அந்த நபர் ஹேக் செய்து முடக்கியுள்ளார். பயனர்கள் அதை அணுக முயன்ற போது "502 Bad Gateway" என்ற பிழைச் செய்தி மட்டுமே தோன்றியது. ஹேக் செய்யப்பட்ட பக்கத்தில், "எனக்கு எந்தத் தீங்கும் விளைவிக்கும் நோக்கம் இல்லை... எனக்குத் தேவை ஒரு நியாயமான வாய்ப்பு மட்டுமே" என்ற தகவலைப் பதிவிட்டுள்ளார்.

ஐஐடியின் தரவுத்தளங்கள், பணம் செலுத்தும் முறைகள் மற்றும் விண்ணப்பதாரர்களின் தரவுகளைத் தன்னால் அணுக முடிந்தது என்றும், நிறுவனத்தின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டவே இதைச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைத்தளமான ரெட்டிட்டில் வைரலானதைத் தொடர்ந்து இணையவாசிகளிடையே இருவேறு கருத்துகள் எழுந்துள்ளன:
நோக்கம் எதுவாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் மற்றுமொரு அமைப்பின் இணையதளத்தை ஊடுருவுவது சட்டவிரோதமானது எனச் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடைமுறைத் திறமை கொண்ட உண்மையான திறமைசாலிகளை அடையாளம் காண்பதில் நமது கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளையே இச்சம்பவம் உணர்த்துகிறது எனப் பலரும் வாதிட்டு வருகின்றனர்.
