'பாக்கெட் நாவல்' படத்திலிருந்து இளையராஜா விலகல் - ஜி.வி.பிரகாஷ் குமார் ஒப்பந்தம்

 
இளையராஜா ஜி.வி.பிரகாஷ் குமார்

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் 'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்தன. இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.

ஆரம்பத்தில் இப்படத்திற்கு இசைமைப்பளராக இசைஞானி இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டு, அந்த அறிவிப்பும் பெரிதும் கொண்டாடப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு மற்றும் விளம்பரங்களில் இளையராஜாவின் பெயர் இடம்பெறவில்லை. இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும் இசைஞானி இளையராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் இப்படத்திலிருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளையராஜா விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாகப் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாகப் படக்குழு தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

தியாகராஜன் குமாரராஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனங்களான 'டைலர் டர்டன்' மற்றும் 'கினோ பிஸ்ட்' (Kino Fist) இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி மற்றும் கிஷோர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இசையமைப்பாளர் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.