"மீண்டு வருவேன்..." - மார்பகப் புற்றுநோயுடன் போராடும் ‘சொக்கத்தங்கம்’ பட ஹீரோயின் உருக்கமான பதிவு!

 
சொக்கத்தங்கம் உமா சங்கரி

தமிழ் சினிமாவில் 'சொக்க தங்கம்' உள்ளிட்ட பல முக்கியத் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் விபரத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மூத்த நடிகை சுமித்ரா. சிவாஜி, ரஜினி, கமல் எனப் பல டாப் நட்சத்திரங்களுடன் நடித்த இவர், அண்மையில் 'வலிமை' படத்தில் அஜித்தின் அம்மாவாகவும் நடித்திருந்தார். கன்னட இயக்குனர் ராஜேந்திர பாபு மற்றும் நடிகை சுமித்ரா தம்பதியரின் மூத்த மகள் தான் இந்த உமா சங்கரி.

!நடிகை உமா சங்கரி

இயக்குனர் சீமான் இயக்கிய 'வீரநடை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் உமா சங்கரி அறிமுகமானார். சத்யராஜின் 'கோவை பிரதர்ஸ்', பார்த்திபனின் 'சூரி', 'கடல் பூக்கள்' மற்றும் தங்கர்பச்சானின் 'தென்றல்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கே. பாக்யராஜ் இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'சொக்க தங்கம்' திரைப்படத்தில் விஜயகாந்தின் தங்கையாக நடித்த பாத்திரம் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது.

மறுபுறம், மலையாளத்தில் 'குபேரன்' மற்றும் கன்னடத்தில் 'உப்பிடடா MBBS' போன்ற மெகா ஹிட் படங்களிலும் இவர் நடித்துள்ளார். பின்னர் சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரை பக்கம் சென்ற உமா, 'சித்தி' சீரியலின் கன்னட ரீமேக்கில் நடித்தார். தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு துஷ்யந்த் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கினார்.

!நடிகை உமா சங்கரி

கடந்த 20 ஆண்டுகளாகத் திரையுலகில் இருந்து விலகியிருந்த உமா சங்கரிக்கு, அண்மையில் மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இதற்கான தீவிர சிகிச்சையில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் 2-வது கட்ட கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி  சிகிச்சையில் இருப்பதாகவும், கடந்த சில நாட்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் சவாலாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்த சவாலான நாட்களைத் தான் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வருவதாகவும், ரசிகர்கள் காட்டும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், கூடிய விரைவில் இந்த நோயில் இருந்து முழுமையாகக் குணமடைந்து மீண்டு வருவேன் என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.