"ஒருபக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்” - ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆர்.எஸ். பாரதி சவால்!

 
ஆதவ் ஆர்.எஸ். பாரதி ஆதவ் ஆர்.எஸ். பாரதி

"வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஒரே ஒரு மேயர் இடத்திலாவது வெற்றி பெற்றுவிட்டால், எனது ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்" என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விடுத்துள்ள அதிரடி சவால் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் களம் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகளிடையே வார்த்தைப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக, சென்னை மேயர் பிரியா குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் விமர்சனம் செய்ததாகக் கூறப்பட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய விசிக தரப்பு மற்றும் தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, "தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகளில், ஒரே ஒரு மேயர் இடத்தையாவது திமுக வென்று காட்டட்டும்" என ஒரு சர்ச்சைக்குரிய சவாலை முன்வைத்தார்.

ஆதவ்

தவெக தரப்பில் இருந்து வந்த இந்த விமர்சனத்திற்கு திமுகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி இன்று மிகக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிதாகக் கட்சி ஆரம்பித்திருப்பவர்கள் ஏதோ பெரிய மாற்றம் வந்துவிடும் என்று கனவு காண்கிறார்கள். நான் அவர்களுக்கு ஒரு பகிரங்க சவால் விடுகிறேன். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு மாநகராட்சியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேயராக வெற்றி பெற்றால், நான் எனது ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையை யாராலும் அசைக்க முடியாது" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

ஆர் எஸ் பாரதி

ஆளும் கட்சியான திமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர், நேரடியாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு இப்படி ஒரு சவாலை விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. ஏற்கனவே தவெக மாநாடுகள் மற்றும் செயற்குழு கூட்டங்கள் மூலம் திமுகவை மறைமுகமாக விமர்சித்து வரும் நிலையில், தற்போது ஆர்.எஸ். பாரதியின் இந்த 'மீசை' சவால், இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் யாருடைய கை ஓங்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.