கள்ளக்காதலால் விபரீதம்... முதல்வர் விஜய் வீட்டின் பின்புறம் வீசப்பட்ட குழந்தை!

 
குழந்தை

முதல்வர் விஜய்யின் வீட்டின் பின்புறம் குழந்தை ஒன்று வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

சிசிடிவி காட்சியில் இரவில் யாருமற்ற வேளையில் வந்த இரண்டு பெண்கள், பச்சிளம் குழந்தையை சாலையோரம் வைத்துவிட்டுச் சென்றது பதிவாகியிருந்தது. அதில் குழந்தையின் தாய் அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற காட்சி  பதிவாகி இருந்தது அங்கிருந்த அதிகாரிகளைப் பெரிதும் கலங்க வைத்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், குழந்தையை வீசிச் சென்றது நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரைச் சேர்ந்த திருமணமே ஆகாத இளம்பெண் என்பது தெரிய வந்தது. தனது ஆண் நண்பருடனான உறவின் மூலம் கர்ப்பமடைந்து, சில நாட்களுக்கு முன்பு வீட்டிலேயே பெண் குழந்தையை பிரசவித்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், அந்த ஆண் நண்பர் தனக்கும் குழந்தைக்கும் எவ்வித ஆதரவும் அளிக்காததால், வேறு வழியின்றி குழந்தையைச் சாலையில் விட்டுச் சென்றதாகக் கூறியுள்ளார்.

குழந்தை பிரசவம்

இதனைத் தொடர்ந்து, அந்த இளம்பெண் மற்றும் அவரது தாயாரை ஆலந்தூரில் உள்ள குழந்தைகள் நலக் குழு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று குழந்தைகள் நல ஆய்வாளர் சீலா முன்னிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, "எனக்குத் திருமணமாகாததால் இந்தக் குழந்தையை வளர்க்க விருப்பமில்லை" எனக் குழந்தையின் தாய் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, குழந்தைகள் பிறந்து 60 நாட்கள் கழித்த பிறகே சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்றுத் தத்துக்கொடுப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்க முடியும் என அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இதையேற்று, 60 நாட்களுக்குப் பிறகு குழந்தையைச் சட்டப்படி ஒப்படைப்பதாக அந்த இளம்பெண் எழுத்துப்பூர்வமாகக் கடிதம் எழுதித் தந்துள்ளார்.

கர்ப்பிணி குழந்தை  மாணவி இளம்பெண் கள்ளக்காதல்

தற்போது எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தையை இன்னும் 4 நாட்களில் பகல்நேரப் பராமரிப்பு மையத்தில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.