”நான் ராணுவ வீரர்”.. நடுரோட்டில் ராணுவ வீரரை கொடூரமாக தாக்கிய காவலர்கள்.. விசாரணையில் அதிர்ச்சி..!!

 
 சையத் அலி முல்லாகான்

பேருந்துக்காகக் காத்திருந்த ராணுவ வீரரின் செல்போனை  பறித்து அவரை தாக்கிய காவலர்களின் செயல் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரமாநிலம், விசாகப்பட்டினம் அருகே உள்ள எலமஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சையத் அலி முல்லாகான். இவர் காஷ்மீரில் 52வது ராஷ்டிரிய ரைபில் கேம்ப் வீரராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள பரவாடா பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

பெண் காவலர்

இந்தநிலையில் பெண்களின் பாதுகாப்பு கருதி "திசா" ஆப் என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை ஆந்திர மாநில திசா போலீசார் (மகளிர் போலீஸ் ) தயார் செய்துள்ளனர். மொபைல் அப்ளிகேஷனை பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து தேவையான நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். அப்போது பொதுமக்களின் செல்போன்களை வாங்கி அவற்றில் "திசா ஆப்" மொபைல் அப்ளிகேஷனை போலீசார் பதிவிறக்கம் செய்து அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும் முறைகள் குறித்து விரிவாகப் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

இதனையடுத்து  அங்குப் பேருந்துக்காகக் காத்திருந்த ராணுவ வீரர் சையத் அலி முல்லா கானின் பெண் காவலர் ஒருவர் சென்று அவருடைய செல்போனை வாங்கி  திசா ஆப் மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்தார்.பின்னர் அவருடைய ஈமெயில் ஐடிக்கு வந்த  ஒன் டைம் பாஸ்வேர்டை பார்த்துச் சொல்லுமாறு அந்தப் பெண் காவலர் ராணுவவீரரிடம் கேட்டுள்ளார். அதற்கு நான், "காஷ்மீரில் ராணுவ வீரராக உள்ளேன். எனக்கு ஏன் இந்த ஆப்" எனப் பெண் காவலரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  பெண் காவலர்  ராணுவ வீரரை பொது இடம் என்றும் பார்க்காமல் தாக்கியுள்ளார்.  இதனைப்  பார்த்துக்  கொண்டிருந்த பொது மக்கள் ராணுவ வீரருக்கு  ஆதரவாகப் பேசத் துவங்கியுள்ளனர்.

தாக்குதல் நடத்திய காவலர்கள்

அப்போது "நான் ராணுவ வீரன், காஷ்மீரில் வேலை செய்கிறேன் விடுமுறைக்கு ஊருக்கு வந்த என்னைக் காவலர் இப்படித்  தாக்குவது நியாயமா, நீங்களே பார்த்துச் சொல்லுங்கள்? என்று பொதுமக்களிடம் முறையிட்டார். அங்கிருந்த பொதுமக்கள் அந்த பெண் காவலரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண் காவலர், காவல்நிலையத்திற்கு போன் செய்து தகவல் அளித்துள்ளார். பின்னர் 3 காவலர்கள் அங்கு வந்துள்ளனர். பின்னர் நான்கு பேரும் சேர்ந்து ராணுவ வீரரைத் தாக்கி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள்  காவலர்களின் அநாகரிக செயலை தங்களுடைய செல்போனில் வீடியோ எடுத்தனர். இதனைப்பார்த்த காவலர்கள் ராணுவ வீரரை அங்கேயே விட்டுச்  சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த விசாகப்பட்டினம் காவல் ஆணையர் ராணுவ வீரரைத் தாக்கிய பெண் காவலர் உட்பட 4 காவலர்களையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

From around the web