"நான் திமிர் பிடித்த திமுககாரன்" - போஸ் வெங்கட் ஆவேசம்!

 
போஸ் வெங்கட் போஸ் வெங்கட்

சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் தனது அரசியல் விசுவாசத்தை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

திமுகவின் கலை, இலக்கியப் பிரிவின் துணைத் தலைவராக இருக்கும் போஸ் வெங்கட், கடந்த 2021 தேர்தலைப் போலவே இந்த முறையும் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்தார். எனினும், திமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் தனது எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ளார்.


தனது பதிவில், "14 வயதிலேயே திமுகவிற்காக வாக்கு சேகரித்தவன் நான். கலைஞரின் எழுத்தில் (ஈர நிலம்) கதாநாயகனாக நடித்து அவர் இதயத்தில் இடம் பிடித்தவன்.”  2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் தமிழகம் முழுவதும் திமுகவிற்காகத் தீவிரப் பிரசாரம் செய்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார். 

தற்போது கலைமாமணி தேர்வுக் குழு மற்றும் சினிமா வாரிய உறுப்பினராகப் பணியாற்றி வரும் அவர், தான் ஒரு முழுநேர அரசியல்வாதி என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

"ஒரு சீட் கிடைக்காததால் கொள்கையை மாற்றிக் கொள்பவன் நான் கிடையாது. இப்போதுதான் கழகத்திற்கு வந்தவர்களோடு என்னை ஒப்பிட்டுப் பேச வேண்டாம். திமுகதான் என் மூச்சு, என் பேச்சு. மீண்டும் சொல்கிறேன், நான் திமிர் பிடித்த 'திமுககாரன்'" என்று உணர்ச்சிபொங்கக் குறிப்பிட்டுள்ளார்.

போஸ் வெங்கட்

'மெட்டி ஒலி' சீரியல் மூலம் அறிமுகமாகி, 'சிவாஜி', 'சிங்கம்', 'விடுதலை 2' மற்றும் சமீபத்திய 'கங்குவா' வரை பல படங்களில் முத்திரை பதித்தவர் போஸ் வெங்கட். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக இயக்கும் பணிகளிலும் அவர் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

சீட் கிடைக்காத நிலையிலும், "தலைவரின் அன்பிற்கும் மக்கள் பணிக்கும் நான் ரசிகன்" என்று அவர் கூறியிருப்பது, கட்சித் தலைமையிடம் அவருக்கு இருக்கும் நற்பெயரை மேலும் உயர்த்தியுள்ளது.