"கல்யாணம் பண்ணிக்கிறேன்..” 17 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் - ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிய கொடூரம்!
வேலூர் மாவட்டத்தில் திருமண ஆசை காட்டி சிறுமியைச் சீரழித்த இளைஞரை வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் (27) என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழகத் தொடங்கியுள்ளார். சுபாஷின் இனிமையான பேச்சால் கவரப்பட்ட அந்தச் சிறுமி, அவரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட சுபாஷ், அங்குச் சென்றுள்ளார். "நாம் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம், உன்னை நான் ராணி போலப் பார்த்துக் கொள்வேன்" என ஆசை வார்த்தைகளைக் கூறி, அந்தச் சிறுமியுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

சிறுமியின் நடத்தையிலும் உடல்நிலையிலும் மாற்றம் தெரிவதைக் கண்ட அவரது பெற்றோர், அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி நடந்த உண்மைகளை அழுது கொண்டே கூறியுள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில், அந்தச் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சுபாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த சுபாஷைத் தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில், நேற்று மாலை அவர் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.
