"அவர் இறந்தது மகிழ்ச்சி தான்" - ராபர்ட் முல்லர் மறைவு குறித்து ட்ரம்ப் சர்ச்சை பதிவு!

 
ட்ரம்ப் ட்ரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் எப்.பி.ஐ (FBI) இயக்குனர் ராபர்ட் முல்லர் III-ன் மறைவு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்து சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் மிக முக்கிய விசாரணை அமைப்பான எப்.பி.ஐ-யின் முன்னாள் தலைவராக 12 ஆண்டுகள் பணியாற்றிய ராபர்ட் முல்லர் (81), நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்குப் பதிலாக, டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவு அதிர வைக்கிறது.

ட்ரம்ப்

தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் டிரம்ப்,  "ராபர்ட் முல்லர் சற்று நேரத்திற்கு முன்புதான் இறந்தார். நல்லது, அவர் இறந்துவிட்டார் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அப்பாவி மக்களை இனி அவரால் காயப்படுத்த முடியாது." என்று பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் மற்றும் ராபர்ட் முல்லர் இடையே நீண்டகாலமாகவே கடும் பகை நிலவி வந்தது: 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு ரஷ்யா உதவியதாக எழுந்த புகாரை, சிறப்பு ஆலோசகராக இருந்து முல்லர் தீவிரமாக விசாரித்தார். இந்த விசாரணையை "சூனிய வேட்டை" என டிரம்ப் கடுமையாகச் சாடி வந்தார். முல்லர் தன்னைப் பழிவாங்கத் துடிப்பதாக டிரம்ப் பலமுறை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ட்ரம்ப்

அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, எப்.பி.ஐ அமைப்பை ஒரு பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவாக மாற்றியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பராக் ஒபாமா ஆகிய இரு அதிபர்களின் கீழ் எப்.பி.ஐ இயக்குநராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

டிரம்பின் இந்தப் பேச்சுக்கு அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் முன்னாள் அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு நாட்டின் அதிபர், மறைந்த ஒரு மூத்த அதிகாரி குறித்து இவ்வாறு பேசுவது நாகரிகமற்றது என அவர்கள் விமர்சித்துள்ளனர். எப்.பி.ஐ அமைப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக இதற்குப் பதில் அளிக்கவில்லை.