"கொலை செஞ்சுட்டேன்.. ஜெயிலுக்கு போறேன்!" - இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட கொலையாளியை 4 மணிநேரத்தில் தூக்கிய போலீஸ்!

 
கொலை கொலை

டெல்லி ஷாலிமார் பாக் பகுதியில் நடந்த ஒரு சாதாரண வாக்குவாதம், கொலையில் முடிந்துள்ளது. கொலையைச் செய்த நபர் அதனைச் சமூக வலைதளத்தில் கொண்டாடிய விதம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஷாலிமார் பாக் பகுதியைச் சேர்ந்த நிதேஷ் (20) என்பவர் சாலையில் நடந்து சென்றபோது, கரண் (18) என்பவருடன் சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கரணுடன் இருந்த மாண்டி (22) மற்றும் ஒரு சிறுவன் சேர்ந்து நிதேஷை சரமாரியாகத் தாக்கினர். அப்போது கரண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிதேஷை பலமுறை குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த நிதேஷ், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

நிதேஷைக் கொலை செய்துவிட்டுத் தப்பிய கரண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், "உங்கள் சகோதரன் ஒரு கொலை செய்துவிட்டான். சில நாட்களுக்குச் சிறைக்குச் செல்லப் போகிறேன். உங்கள் அன்பைத் தொடர்ந்து எனக்கு அனுப்புங்கள்" எனத் தன்னைத் பின்தொடர்பவர்களிடம் மிகவும் பெருமையாகப் பேசியுள்ளார். இந்தக் கொலைச் சம்பவத்தைத் தனது வீரமாகச் சித்தரித்து அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. கொலை நடந்த தகவல் கிடைத்ததும், டெல்லி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இன்ஸ்டாகிராம் வீடியோ மற்றும் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொலை நடந்த அடுத்த 4 மணி நேரத்திற்குள் கரண், மாண்டி மற்றும் ஒரு சிறுவன் என மூவரையும் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். கைதானவர்கள் கொலையை ஒப்புக்கொண்ட நிலையில், கரண் மற்றும் மாண்டி சிறையில் அடைக்கப்பட்டனர். 18 வயதுக்குட்பட்ட சிறுவன் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.