உடனடி அமல்.. இன்று முதல் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

 
முதல்வர் கான்வாய் போக்குவரத்து விஜய் கார்

சென்னையின் மிக முக்கியப் போக்குவரத்து வழித்தடமான அடையாறு பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், அடையாறு எல்.பி சாலையில் மாநகரப் போக்குவரத்து காவல் துறை இந்த மாற்றங்களை அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக, எல்.பி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பிலிருந்து எல்.பி x எம்.ஜி சாலை சந்திப்பு வரையிலான பகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பின்வரும் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்:

1. பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான வழித்தடம் (திருவான்மியூர் டு திரு.வி.க பாலம்)
திருவான்மியூரிலிருந்து திரு.வி.க பாலம் நோக்கிச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் மற்றும் இதர கனரக வாகனங்களும், எல்.பி x எம்.ஜி சாலை சந்திப்பிலிருந்து திருப்பி விடப்படும். இந்த வாகனங்கள் எம்.ஜி சாலை, சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை மற்றும் சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ வழியாக மீண்டும் எல்.பி சாலையை அடைந்து செல்லலாம்.

போக்குவரத்து மாற்றம்

2. பெசன்ட் நகரில் இருந்து வரும் வாகனங்கள் : பெசன்ட் நகரில் இருந்து 7-வது அவென்யூ வழியாக வரும் வாகனங்கள், மகாத்மா காந்தி சாலையை அடைந்து வலது புறமாகத் திரும்ப வேண்டும். பின்னர் சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலையில் இடது புறம் திரும்பி, சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ வழியாக எல்.பி சாலையை அடையலாம்.

3. எல்.பி சாலையிலிருந்து திருவான்மியூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள்: எல்.பி சாலையிலிருந்து திருவான்மியூர் நோக்கி வரும் வாகனங்கள் சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ சாலை வழியாகச் செல்ல வேண்டும். அங்கிருந்து வலதுபுறம் திரும்பி 11-வது குறுக்குச் சாலையிலும், பின்னர் இடதுபுறம் திரும்பி 8-வது குறுக்குச் சாலையையும் அடைய வேண்டும். அதன்பின்பு, மீண்டும் வலதுபுறம் திரும்பி 10-வது குறுக்குச் சாலை வழியாக எம்.ஜி சாலையை அடைந்து தங்களின் இலக்குகளை நோக்கிப் பயணிக்கலாம்.

போக்குவரத்து

4. கார்கள் மற்றும் இலகுரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை:  திருவான்மியூரிலிருந்து திரு.வி.க பாலம் நோக்கிச் செல்லும் கார்கள் மற்றும் இலகுரக வாகனங்கள், எல்.பி x எம்.ஜி சாலை சந்திப்பில் இடது புறமாகத் திரும்ப வேண்டும். தொடர்ந்து இந்திரா நகர் 2-வது அவென்யூ சாலையை அடைந்து, வலது புறம் திரும்பி 1-வது பிரதான சாலை வழியாகச் சென்று, 1-வது அவென்யூ சாலையை அடைய வேண்டும். அங்கிருந்து வலதுபுறம் திரும்பி எல்.பி x இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பை அடைந்து, இடதுபுறம் திரும்பிச் செல்லலாம். (குறிப்பு: இந்திரா நகர் 2-வது அவென்யூ சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது).

ஒருவழிப்பாதையாக மாற்றப்படும் சாலைகள்

இதுவரை சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலையிலிருந்து மகாத்மா காந்தி சாலை வழியாக எல்.பி சாலை வரையிலும், சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ சாலையிலிருந்து சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை வரையிலும் ஒருவழிப்பாதையாக இருந்த சாலைகள், தற்போது இருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன. சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை வழியானது திரு.வி.க. பாலம் நோக்கிச் செல்லும் ஒருவழிப்பாதையாகவும், 11-வது குறுக்குச் சாலை வழியானது திருவான்மியூர் நோக்கிச் செல்லும் ஒருவழிப்பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது.

அடையாறு மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் அடுத்தடுத்து மெட்ரோ பணிகள் வேகமெடுத்து வருவதால், வாகன ஓட்டிகள் அனைவரும் இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு நல்கி, பயண நேரத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு சென்னை மாநகரக் காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.