உடனடி அமல்... தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்தும் வகையிலும் நிர்வாக நலன் கருதியும் 4 ஐபிஎஸ் மற்றும் காவல் துணை ஆணையர் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு உள்துறை செயலாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜி. சந்தீஷ், சென்னை தெற்குப் போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைக் காவல் அலுவலகக் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஹரிகிரண் பிரசாத், ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தெற்குப் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக இருந்த கே. முத்துக்குமார், ஆவடி காவல் ஆணையரகத்தின் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையரகத்தின் உட்பட்ட பள்ளிக்கரணை பகுதி துணை ஆணையராக டி. ஈஸ்வரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபகாலமாகச் சாதிய மோதல்கள், கடலோரப் பகுதிகளில் சட்டவிரோதக் கடத்தல் மற்றும் மணல் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து பரபரப்பான சூழல் நிலவி வந்தது.

இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தலைமைக் காவல் அலுவலகத்தில் இருந்த சுறுசுறுப்பான அதிகாரியான ஹரிகிரண் பிரசாத்தை அரசு களத்தில் இறக்கியுள்ளதாகக் காவலத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில், ராமநாதபுரத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஜி. சந்தீஷிற்குச் சென்னை மெட்ரோ நகரப் பொறுப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 அதிகாரிகளின் பணியிட மாற்ற உத்தரவுகளும் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அதிகாரிகள் அனைவரும் தாமதமின்றிப் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
