முக்கிய அறிவிப்பு: 'சிங்கார சென்னை' போக்குவரத்து அட்டை திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம்!
தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு அதிநவீன மற்றும் எளிமையான கட்டணப் பரிவர்த்தனை வசதியை வழங்கும் வகையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடைமுறையில் உள்ள 'சிங்கார சென்னை' தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை திட்டம் தற்போது தமிழ்நாடு முழுவதும் முழுமையாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகப் போக்குவரத்துத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுவரை சென்னை மெட்ரோ மற்றும் மாநகரப் போக்குவரத்துச் சேவைகளில் பயணிகளின் பயன்பாட்டில் இருந்த 'சிங்கார சென்னை' தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை திட்டம், இனி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன் மூலம் பயணிகள் எந்தவித சிரமமுமின்றி எளிதாகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் தங்களது பயணக் கட்டணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி ஒட்டுமொத்தப் போக்குவரத்துச் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள மாணவ-மாணவிகளின் கல்வி நலனைக் கருத்தில்கொண்டு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது: போதிய போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற, மலை மற்றும் உட்புறப் பகுதிகளில் பள்ளி மாணவர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பள்ளி நேரங்களுக்கு ஏற்ப காலை மற்றும் மாலை வேளைகளில் இந்தப் பேருந்துகள் இயக்கப்படும்.
இதன் மூலம் சுமார் 140 பள்ளிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 19,000 மாணவர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்திடத் தொழில்நுட்பம் புகுத்தப்படவுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை நிகழ்நேரத்தில் கண்காணிக்க ஏதுவாக, 13,490 பேருந்துகளில் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் அவசர உதவிப் பொத்தான்கள் பொருத்தப்படும்.
ஏற்கனவே வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் மட்டும் உள்ள 286 பேருந்துகளில் புதிதாக அவசர உதவிப் பொத்தான்கள் இணைக்கப்படவுள்ளன. இந்தப் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டமானது ஒட்டுமொத்தமாக ரூ.17.99 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகளுக்கு விரைவான தீர்வு

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விபத்து இழப்பீட்டு வழக்குகளுக்குத் தீர்வு காணும் வகையில் அரசாங்கம் முக்கிய முடிவு எடுத்துள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலுவையில் உள்ள 5,665 மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணப்படவுள்ளது. இதன் வாயிலாக விபத்து இழப்பீட்டுக் கோரிக்கைகள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய காலத்தில் நிவாரணத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும்.
இந்த நிலுவை வழக்குகளை விரைந்து பேசித் தீர்வு காண்பதற்காக ரூ.5,500.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையின் இந்த அதிரடி மற்றும் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள் தமிழக மக்களிடையே, குறிப்பாகப் பயணிகள் மற்றும் மாணவர் வட்டாரத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
