"மறைமுக மொழித் திணிப்பு"... 3வது மொழித் தேர்ச்சி கட்டாயம் உத்தரவுக்குத் தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் கீழ், சிபிஎஸ்இ 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 3-வது மொழித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கைக்குத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
சிபிஎஸ்இ-யின் இந்த மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், 3-வது மொழியை 'விருப்ப மொழி' என்று பெயரளவில் கூறிவிட்டு, அதில் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்குவது என்பது மாணவர்களின் மீது நடத்தப்படும் ஒரு மறைமுக மொழித் திணிப்பு ஆகும்.

இத்தகைய கட்டாய நடைமுறைகள் பள்ளி மாணவர்களின் கல்விச் சுமையைக் கூட்டுவதோடு, மாநிலங்களின் மொழி உரிமைகளைப் பறிப்பதாக அமையும்.
தமிழ்நாடு பல தசாப்தங்களாகப் பின்பற்றி வரும் இருமொழிக் கொள்கையின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், மாநிலத்தின் இந்த உறுதியான கொள்கையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் மற்றும் பன்முகத்தன்மைக்கு எதிரான இந்த சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை மத்திய அரசும், சிபிஎஸ்இ நிர்வாகமும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் கல்வி வட்டாரங்களிலும், தமிழக அரசியல் தளத்திலும் தற்பொழுது புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
