அமெரிக்காவில் டாஸ் போட்டு வெற்றியாளர் தேர்வு... புளோரிடா உள்ளாட்சித் தேர்தலில் ஜெனிபர் லாக்னர் வெற்றி!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட இரு பெண் வேட்பாளர்களும் துல்லியமாகச் சமமான வாக்குகளைப் பெற்றதால், சட்ட விதிகளின்படி நாணயம் சுண்டி விடப்பட்டு டாஸ் மூலமாக வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்ட சுவாரசியமான நிகழ்வு நடைபெற்றுள்ளது. அட்லாண்டிக் பீச் நகர கமிஷன் தேர்தலில் ஜெனிபர் லாக்னர் மற்றும் லிசா ஹெரால்ட் ஆகியோர் சம வாக்குகள் பெற்ற நிலையில், டாஸ் முறையில் ஜெனிபர் லாக்னர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
புளோரிடாவின் அட்லாண்டிக் பீச் நகர கமிஷன் 4-வது இடத்திற்கான தேர்தலில் வேட்பாளர்களான ஜெனிபர் லாக்னர் மற்றும் லிசா ஹெரால்ட் ஆகியோர் தலா 3,162 வாக்குகள் பெற்றனர். ஒரு வாக்கு கூட வித்தியாசம் இல்லாமல் இருவரும் சம நிலையில் நின்றது தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
வாக்குச் சமநிலையைத் தொடர்ந்து இயந்திர மற்றும் கைமுறை மறுவாக்கு எண்ணிக்கைகள் நடத்தப்பட்ட போதிலும், முடிவில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் இருவரும் சம வாக்குகளிலேயே நீடித்தனர். இதனால் வெற்றியாளரைத் தீர்மானிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

தேர்தலில் வாக்குகள் சமமாகும்போது, அதிர்ஷ்டம் அல்லது சமவாய்ப்பு அடிப்படையில் முடிவைத் தீர்மானிக்கப் புளோரிடா மாகாணச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, டியுவல் கவுண்டி தேர்தல் மேற்பார்வையாளர் அலுவலகத்தில் நாணயம் சுண்டி விடும் நடைமுறை நடத்தப்பட்டது.
மூன்று டாஸ் வாய்ப்புகளில் இருவரும் முதலில் தலா ஒருமுறை 'ஹெட்' அல்லது 'டெய்ல்' தேர்வு செய்யும் விதி பின்பற்றப்பட்டது. முதல் டாஸில் லிசா ஹெரால்ட் 'ஹெட்' கேட்ட நிலையில் நாணயம் 'டெய்ல்' என விழுந்தது. இரண்டாவது டாஸில் ஜெனிபர் லாக்னர் 'ஹெட்' கேட்க, நாணயமும் அவருக்குச் சாதகமாக விழுந்தது. இதனால் 2-0 என்ற கணக்கில் ஜெனிபர் லாக்னர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த பகுதியில் கடந்த சுமார் 14 ஆண்டுகளில் நிகழ்ந்த இரண்டாவது சமவாக்குத் தேர்தல் இது எனத் தேர்தல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வெற்றிக்குப் பிறகு பேசிய ஜெனிபர் லாக்னர், இது ஜனநாயகத்தின் தனித்துவத்தைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார். தோல்வியடைந்த லிசா ஹெரால்டும் இந்த முடிவைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு, இது ஒரு மறக்க முடியாத அனுபவம் எனத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துவதாகத் தேர்தல் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
