கோவையில் திருடச் சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் பொருட்களைச் சேதப்படுத்திவிட்டு சுவரில் 'சாரி' எழுதிவிட்டுச் சென்ற திருடன்!

 
திருட்டு கொள்ளை சாரி

கோவையில் ஐ.டி ஊழியரின் பூட்டிய வீட்டில் திருட முயன்ற மர்ம நபர், அங்கு மதிப்புமிக்க பொருட்கள் எதுவும் சிக்காத விரக்தியில் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு, சுவரில் 'சாரி' என எழுதி வைத்துத் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (45) என்பவர் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். சில நாட்கள் கழித்து வீடு திரும்பியபோது முன்பக்கக் கதவைத் திறந்து உள்ளே சென்ற அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

காரில் வழிப்பறி கொள்ளை!! மக்களே உஷார்!! இப்படியும் நடக்கலாம்!!

மர்ம நபர் ஒருவர் வீட்டின் பக்கவாட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், வீட்டில் நகை மற்றும் பணப் புழக்கம் இல்லாத ஆத்திரத்தில், படுக்கையறையிலிருந்த பீரோவை உடைத்துப் பொருட்களைக் கீழே கொட்டியதுடன், கட்டிலில் இருந்த மெத்தை, சோபா, வாஷிங் மெஷின் மற்றும் பிரிட்ஜ் போன்ற பல சாதனங்களையும் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளார்.

வீட்டில் எங்கு தேடியும் மதிப்புமிக்க பொருள்கள் கிடைக்காத விரக்தியில் அங்கிருந்த பொருள்களைச் சேதப்படுத்திய அந்த நபர், இறுதியில் வீட்டின் சுவரில் ஆங்கிலத்தில் 'சாரி' என்றும் எழுதி வைத்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

நகைக்கடை திருட்டு

இது குறித்து கிருஷ்ணமூர்த்தி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அங்கு பதிவாகியிருந்த தடயங்களைச் சேகரித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்