ஜெர்மனியில் ஆளுங்கட்சி பெரும்பான்மை இழந்தது... 3 அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா... உலக அரசியலில் மீண்டும் பரபரப்பு!
ஜெர்மனியில் நிதி அமைச்சர் லிண்ட்னர் பதவி நீக்கத்துக்கு ஆதரவாக 3 அமைச்சர்கள் திடீரென அடுத்தடுத்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது உலக அரசியலில் அடுத்த பரபரப்பை உருவாக்கியுள்ளது. 3 அமைச்சர்களின் திடீர் ராஜினாமாவைத் தொடர்ந்து ஆளுங்கட்சி பெரும்பான்மை இழந்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
ஜெர்மனியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவரது அரசாங்கத்தில் கூட்டணி கட்சி தலைவரான லிண்ட்னர் நிதி அமைச்சர் பொறுப்பு வகித்து வருகிறார். இதற்கிடையே சமீப காலமாக நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. எனவே வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் மூலம் இதனை சமாளிக்க அரசாங்கம் முடிவு செய்தது.
ஆனால் நிதி அமைச்சர் லிண்ட்னர் அரசின் இந்த முடிவை நிராகரித்தார். இதனால் பிரதமர் ஓலாப் ஸ்கோல்சுக்கும், லிண்ட்னருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல்போக்கு ஏற்பட்டது. இந்தநிலையில் நிதி அமைச்சர் லிண்ட்னரை பதவி நீக்கம் செய்வதாக பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் அறிவித்தார். இதனையடுத்து லிண்ட்னருக்கு ஆதரவு தெரிவித்து போக்குவரத்து, கல்வி மற்றும் நீதித்துறை அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
எனவே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதால் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி அங்குள்ள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதன்காரணமாக நாடாளுமன்றத்தில் வருகிற ஜனவரி 15-ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால் அரசாங்கம் கலைக்கப்பட்டு முன்னரே தேர்தல் நடைபெறும். இது ஜெர்மனி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் ஓலாப் ஸ்கோல்சின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்டம்பரில் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.