இந்தியாவில் 4 பேரில் ஒருவர் இளைஞர்; மக்கள்தொகை 147.66 கோடியாக உயர்வு - ஐ.நா. ஆய்வறிக்கையில் சுவாரஸ்யம்!

 
இந்தியா இளைஞர்கள் இளைஞர் நம்பிக்கை எதிர்காலம் மக்கள்தொகை

உலகிலேயே அதிக மக்கள்தொகை மற்றும் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழும் நிலையில், இந்தியாவின் மக்கள்தொகைக் கட்டமைப்பு, இளைஞர்களின் பங்களிப்பு, பெண்களின் சுகாதாரம் மற்றும் எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஆகியவை அடங்கிய விரிவான ஆய்வறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் வெளியிட்டுள்ளது.

ஐ.நா. அறிக்கையின்படி, இந்தியாவின் தற்போதைய மொத்த மக்கள்தொகை 147.66 கோடியாக உள்ளது. 141.29 கோடி மக்கள்தொகையுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், இந்தியாவின் மக்கள்தொகை இரட்டிப்பாக 81 ஆண்டுகள் ஆகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள்தொகையில் 10 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் 26 சதவீதமாக உள்ளனர். அதாவது, இந்தியாவில் 4 பேரில் ஒருவர் இந்த இளைய வயதுப் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கிறார்.

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 14 வயதுக்குட்பட்டவர்கள் 24 சதவீதமாகவும், 10 முதல் 19 வயதுடையவர்கள் 17 சதவீதமாகவும் உள்ளனர். குறிப்பாக, வேலை செய்யும் வயதுடையவர்கள் (15 முதல் 64 வயது) 69 சதவீதம் பேர் இருப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 8 சதவீதமாக உள்ளனர்.

மக்கள் தொகை மக்கள்தொகை

இந்தியாவில் குழந்தை பெற்றுக்கொள்வது மீதான விருப்பம் தொடர்ந்து வலுவாக உள்ளது. 35 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் இதுவரை குழந்தை இல்லாதவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 85 சதவீதம் பேர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். 18 முதல் 39 வயதுடைய பெண்கள் தங்களுக்கு ஏற்ற குடும்ப அளவாகச் சராசரியாக 2 குழந்தைகளை விரும்புகின்றனர். இந்தியாவில் ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை 2 என்ற சீரான அளவில் உள்ளது.

இந்தியாவில் மகப்பேறு காலத்தில் ஏற்படும் தாய்மார்களின் உயிரிழப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. 2022–24 காலகட்டத்தில் ஒரு லட்சம் குழந்தைகள் உயிருடன் பிறக்கும்போது 87 தாய்மார்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். அதேபோல், மருத்துவப் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்களின் உதவியுடன் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை 2019–21-ல் 89.4 சதவீதமாக இருந்த நிலையில், 2023–24-ல் 91.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 64 சதவீதப் பெண்கள் தனிப்பட்ட செல்போன் வைத்துள்ளனர். இதில் நகர்ப்புறங்களில் 77.6 சதவீதப் பெண்களும், கிராமப்புறங்களில் 57.4 சதவீதப் பெண்களும் செல்போன் பயன்படுத்துகின்றனர். இது நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையே நிலவும் டிஜிட்டல் வசதி இடைவெளியை எடுத்துக்காட்டுகிறது.

புனே இளைஞர்கள் போராட்டம்

கடந்த 12 மாதங்களில் கணவர் அல்லது நெருங்கிய துணையால் வன்முறையை எதிர்கொண்டதாகத் தெரிவித்த பெண்களின் விகிதம் 29.2 சதவீதத்திலிருந்து 22.3 சதவீதமாகக் குறைந்துள்ளது வரவேற்கத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 83 சதவீதம் பேர் தங்களது எதிர்காலம் குறித்து நேர்மறையான மற்றும் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். அதேவேளையில், உலகளாவிய போர்ச் சூழல், பொருளாதாரப் பாதுகாப்பின்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து 47 சதவீதம் பேர் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சுகாதாரம் மற்றும் வளர்ச்சித் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஐ.நா. மக்கள் தொகை நிதியத்தின் இந்தியப் பிரதிநிதி ஆண்ட்ரியா எம். வோஜ்னர், இளைஞர்களின் விருப்பங்களையும் கருத்துகளையும் அறிந்து அதற்கேற்ப அரசுத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய பலமாகத் திகழும் இந்த இளைஞர் சக்திக்குத் தரமான கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் சமமான வளர்ச்சி வாய்ப்புகள் வழங்கப்பட்டால், இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி உலக அரங்கில் புதிய உச்சத்தைத் தொடும் என்பதே இந்த ஆய்வறிக்கையின் முக்கியச் செய்தியாகும்.