கரூரில் 32 பேருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி.. அரசாணை வெளியீடு!
தமிழக முதலமைச்சர் விஜய் நாளைஅரசுப் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகக் கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அங்கு 32 நபர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நாளை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரம்மாண்டமான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், அரசுப் பணிகளில் இருந்து மறைந்த அரசு ஊழியர்களின் வாரிசுகள் மற்றும் குடும்பத்தினர் 32 நபர்களுக்கு, அவர்களின் தகுதிக்கேற்ப பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் நேரடியாக வழங்க உள்ளார். இதற்கான நிர்வாக ஒப்புதல் மற்றும் அரசாணைகள் வெளியிடப்பட்டு, பயனாளிகளுக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் வருகையையொட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் அவர் பயணிக்கும் முக்கிய வழித்தடங்கள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விழா மேடை, பயனாளிகள் அமரும் இடம் மற்றும் வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்பொழுது தீவிரமாகச் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. பந்தல் அமைக்கும் பணியில் நேற்று ஏற்பட்ட சிறிய விபத்தைத் தொடர்ந்து, இன்று அனைத்துப் பணிகளும் கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
