சிவகங்கையில் நடுரோட்டில் விவசாயி ஓட ஓட விரட்டிக் கொலை... மர்ம கும்பல் வெறிச்செயல்!
சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே பட்டப்பகலில் விவசாயி ஒருவர் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டித் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடைவீதிக்குச் சென்ற போது இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே வசித்து வந்த விவசாயி மகேஸ்வரன் (வயது 40), கடைவீதிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாகத் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கும்பலின் கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த சிவகங்கை காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மகேஸ்வரனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய மர்ம கும்பலைப் பிடிக்கப் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
