தமிழகத்தில் 14,829 பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த நேரிடும்... அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சி - அன்புமணி எச்சரிக்கை!

 
அன்புமணி

தமிழகத்தில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிவேகமாகக் குறைந்து வருவதாகவும், இதனைத் தடுத்துப் பள்ளிகளுக்குப் புத்துயிரூட்ட அரசு உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார

தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 24,349 அரசுத் தொடக்கப் பள்ளிகளில், 14,829 பள்ளிகளில் (சுமார் 60.90 சதவீதம்) ஐந்தாம் வகுப்பு வரை சேர்த்து மொத்தம் 30-க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர். இதில் 6,635 பள்ளிகளில் 20-க்கும் குறைவான மாணவர்களும், 3,027 பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களும் மட்டுமே கல்வி கற்கின்றனர்.

அன்புமணி

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட சுமார் 15 ஆயிரம் பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்டவை வட மாவட்டங்களில்தான் உள்ளன. குறிப்பாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், கடலூர், திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் 3,062 பள்ளிகள் இந்தச் சூழலில் இயங்குகின்றன.

கடந்த 2015-16 கல்வியாண்டில் 75.52 லட்சமாக இருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 43 சதவீதம் குறைந்து, 2025-26 கல்வியாண்டில் 43.03 லட்சமாக அதளபாதாளத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரே ஆண்டில் மட்டும் 2.07 லட்சம் மாணவர்கள் குறைந்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததும், அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாததுமே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலைமையை மாற்றத் பள்ளிக்கல்வித்துறைக்கான நிதியை உடனடியாக 50 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும், அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றச் சிறப்பு இயக்கத்தைத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.