கடந்த 6 மாதங்களில் 1,914 சிறார் வன்கொடுமை வழக்குகள்.. பாகிஸ்தானில் கொடூரம்!
பாகிஸ்தானில் நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் கொடுமைகள் குறித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக மொத்தம் 1,914 வழக்குகள் பதிவாகியுள்ளதாகப் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவரும் மூத்த நாடாளுமன்ற செனட்டருமான ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். பதிவான மொத்த வழக்குகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான சம்பவங்கள் பஞ்சாப் மாகாணத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளதாகவும், இது அங்குள்ள குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறன் மீது பலத்த கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

பதிவான வழக்குகளில் 57 சதவீதம் நகர்ப்புறங்களிலும், 43 சதவீதம் கிராமப்புறங்களிலும் பதிவாகியுள்ளன. இதன் மூலம் சிறார் மீதான கொடுமை என்பது குறிப்பிட்ட பகுதி சார்ந்ததல்லாமல் ஒட்டுமொத்த சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
பதிவான வழக்குகளில் 43 சதவீத சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவர்களே குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, சுமார் 45 சதவீத சம்பவங்கள் குழந்தைகளின் சொந்த வீடுகளிலேயே அரங்கேறியுள்ளன.

சிறார்களைக் குறிவைக்கும் குற்றவாளிகளுக்கு எவ்வித விலக்கும் அளிக்கப்படக் கூடாது எனவும், குழந்தைகளைப் பாதுகாப்பது அரசும் சமுதாயமும் இணைந்து முன்னெடுக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
