“இந்த ஆட்சியில் 0% கமிஷன்.. தவெகவினர் எந்த டெண்டரும் எடுக்கக்கூடாது” - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அதிரடி!
சென்னை வில்லிவாக்கத்தில் அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தமிழக அரசின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அரசு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முதல்வர் சி. ஜோசப் விஜய் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அரசு டெண்டர்களில் எவ்விதமான கமிஷன் அல்லது பரிந்துரைகளோ இருக்கக்கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முந்தைய ஆட்சிக் காலங்களில் 40 முதல் 50 சதவீதம் வரை கமிஷன் நடைமுறையில் இருந்தது, ஆனால் தற்போது தவெக அரசில் 0% கமிஷன் மட்டுமே இருக்கும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் எவரும் எந்தவொரு அரசு டெண்டரையும் எடுக்கக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தவெக பெயரையோ அல்லது அமைச்சர்களின் பெயரையோ சொல்லி யாரும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடக்கூடாது என அவர் எச்சரித்துள்ளார்.
வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். வெற்றிக்குப் பின் மக்களுக்கு நன்றி சொல்லச் செல்வதற்கு முன்பாக, தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இதன் ஒரு பகுதியாகவே வில்லிவாக்கம் தொகுதியில் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது.
அரசு அலுவலகங்களில் கோப்புகள் தேக்கமடைவதைத் தடுக்கத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத மது விற்பனை குறித்து பேசிய அமைச்சர், சென்னையில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவது குறித்து மாநகராட்சியுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்வதைக் கண்டறிந்தால், அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் விஜய் எடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான அரசின் அணுகுமுறை குறித்து அவர் விளக்கினார்: முன்னாள் முதலமைச்சர் அல்லது முன்னாள் அமைச்சர்களைப் பழிவாங்கும் நோக்கம் தவெக அரசுக்கு இல்லை. உதயநிதி ஸ்டாலின் தோல்வி விரக்தியில் பேசி வருகிறார் என்று விமர்சித்த அவர், அரசு எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடாது என உறுதி அளித்தார்.
